திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாயுடுமங்கலத்தில் துரிஞ்சாபுரம் ஒன்றிய ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் திட்ட விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்தமோகன் முன்னிலை வகிக்க, அனைவரையும் இளம் வல்லுநர் சா.அன்பரசன் வரவேற்றார். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் சு.ராஜாத்தி திட்ட அறிமுக உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையேற்று துவக்கிவைத்து பேசுகையில்,
சுயஉதவிக்குழுவை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் வேளாண் சார்ந்த வேளாண் சாரா துறைகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள் தொழில் முனைவோர்களை உருவாக்கி தொழில் வாய்ப்பு செய்தல், தொழில்முனைவோருக்கான திட்ட நிதி பெற வழிவகுத்தல், இனமானிய நிதியின் கீழ் 30 சதவிதம் சொந்த முதலீடு 10 சதவிதம் வங்கி கடன் 60 சதவிதம் மூலம் தொழில் துவங்க நடவடிக்கை எடுத்தல், தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் மூலம் சிறப்பான சேவைகள் வகுத்தல் தொடர் சேவைகள் வழங்குவதற்காக ஊராட்சியிலிருந்து தொழில் நடவடிக்கைகளுக்கான சமூக வல்லுநர்கள் தேர்வு செய்வது குறித்தும், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார்.
ஊரக தொழில் முனைவோர்களை உருவாக்குதல் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் ஆகியவை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் தமிழ்நாட்டில் 26 மாவட்டம் 120 ஒன்றியம் 3994 ஊராட்சிகள் செயல்படுத்தப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் துரிஞ்சாபுரம், வந்தவாசி, சேத்துப்பட்டு, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், தெள்ளார், ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 308 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக நேற்று துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான திட்ட விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது.
தொழில் திட்டம் குறித்து செயல்அலுவலர் பி.தனசேகர் திறன் பயிற்சி குறித்து செயல்அலுவலர் செ.அரசு, கணக்கு மற்றும் நிர்வாகம் குறித்து செயல் அலுவலர் ச.சங்கர் ஆகியோர் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு திட்ட விளக்கவுரையாற்றினார். இதில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பா.விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ந.பிரகாஷ் உள்பட அரசு அலுவலர்கள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் வட்டார அணி தலைவர் தே.மஞ்சுநாதன் நன்றி கூறினார்.